Guru-Quotes

  • Home /Quotes of the week/குருவே-சௌக்கியம், ஆத்மானந்தம், ஞான ப்ராப்தி

 

குருவே-சௌக்கியம், ஆத்மானந்தம், ஞான ப்ராப்தி

“விவேக சூடாமணி” போன்ற அநேக அத்வைத க்ரந்தங்களில் சிஷ்யன் குருவுக்கு அப்படியே சரணாகதி செய்து  அவர்தான் கதி என்று கிடப்பதாக ஆரம்பித்திருக்கும். கடைசியில் அவருடைய அநுக்ரஹத்தாலேயே தனக்கு மிகவும் உயர்ந்ததான  அத்வைதாநுபவம் ஏற்பட்டதாக ரொம்பவும் நன்றியுடன் நமஸ்காரம் தெரிவித்திருக்கும்.

“ஈஸ்வரன்” என்று கண்ணிலே தெரியாத ஒரு தத்துவத்தைச் சொன்னால் அது அத்வைதமாகப் போக ஆசைப்படுகிறவனுக்கு அவ்வளவாக அவஸ்யமில்லாத ஒரு த்வைதமாகத் தோன்றுகிறது. ஆனாலும், ப்ரத்யக்ஷத்தில் இவனுக்கும் ஒரு அநுபவியின் உபதேசமும் அநுக்ரஹமும் தேவைப்படுகிறது. ஆனபடியால் இப்படி உபகாரம் பண்ணுபவராக குரு என்று ஒருவரை இவனுடைய கண்ணுக்கு முன்னால் மநுஷ்ய ரூபத்தில் காட்டுகிறபோது அதன் த்வைதம் இவனுக்கு இடறுவதில்லை; அது அத்வைதத்துக்கு ஸஹாயமானது.

அதனால், ஈஸ்வராநுக்ரஹம் என்று சொல்லிக் கொஞ்சம் அழுத்தமாகவே த்வைத  பாவத்தைக் கொண்டுவிடா விட்டாலும் அதையே குரு ப்ரஸாதம் என்பதாக  அத்வைதிகளும் சிறப்பித்துச் சொல்லித்தான் இருக்கிறார்கள். “குர்வஷ்டகம்” முதலான அநேக நூல்களில் நம்முடைய  ஆசார்யாள்  இவ்விஷயத்தை ரொம்பவும் பக்தியோடும், நன்றியோடும், ஸ்பஷ்டமாகவும், அழுத்தமாகவும், கூறியிருக்கிறார்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா