Nithyakarma

நித்ய கர்மாவின் முக்கியத்துவம்

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று அவ்வையார் தன் பாடலில் எந்த பிணியும் இல்லாத ஒரு மானிடப் பிறப்பின் சிறப்பை விவரித்துள்ளார். அப்படிப்பட்ட மனித குலத்தில், முப்புரி தரித்த பிராமணனனாய் பிறத்தல் அதனினும் அரிது என்று பல நூல்கள் பிராமண பிறப்பைப் பற்றி மிக உன்னதமாக விவரிக்கின்றன. அப்படிப்பட்ட அரிதர்க்கரிய ஒரு பிறப்பு பெற முழு முதற் காரணம் நம் முற்பிறவியின் புண்ணிய பலன்களே.

“நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை” என்பதற்கேற்ப பிராமணன் செய்யும் நித்ய கர்மாவினால் பிராமணன் தவிர உலகில் பகவானால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பயன் பெறுகிறார்கள்.ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு பிராமணனை பூணூல் தரித்து பார்ப்பதே அரிதாக இருக்கிறது. நாகரீகம் என்ற பேரில் நமக்கு நாமே ஒரு சமாதானம் சொல்லிக்கொண்டு நம் வேத தர்மத்தில் இருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டோம். இது இப்படியே தொடருமானால், வெகு விரைவில், பிராமண குலம் ஒன்று இருந்தது என்று ஏடுகளில் தான் படிக்க வேண்டியிருக்கும்.

இவ்வளவு சிறப்பான ஒரு பிறப்பின் பயனை நிலை நிறுத்திக் கொள்ளவும், இன்றைய நவநாகரீக கலாசாரத்தின் தாக்கங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் நம் வேதங்கள் பல வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளன. அதில் தலையாய கடமையாய் பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவன் செய்ய வேண்டிய நித்யகர்மாக்களே. உபநயனத்திற்குப் பின் ஒவ்வொரு பிராமணனும் அனுதினமும் தவறாது மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டியது அவனது தலையாய கடமையாகும்.

நம் முன்னோர்கள் அவர்களது கடமையை சரிவர செய்து வந்ததால் தான் நம்மால் இப்படி ஒரு நல்ல வாழ்க்கையை பெற முடிந்தது என்பதனை உணர வேண்டும்.. அது நம் சந்ததியினருக்கும் தொடர வேண்டுமானால், நாமும் தவறாமல் நம் நித்ய கர்மாக்களை செய்ய வேண்டும். இதற்காகத்தான், நம் பெற்றோர்கள் பெரும் பொருட்செலவில், நமக்கு உபநயனம்((உப – சமீபமாக , நயனம் – அழைத்துச் செல்வது) செய்கிறார்கள். ஆனால், இன்று பல குடும்பங்களுக்கு இது தெரியாமற்போனது ஒரு துர்ப்பாக்கியம். ஒரு குழந்தையை குருகுலத்திற்கு அடியெடுத்து வைக்கச் செய்யும் இந்த உன்னதமான ஒரு நிகழ்ச்சியினை பல குடும்பங்கள் தங்கள் சமூக அங்கீகாரத்தின் வெளிப்பாடாக காட்ட வேண்டும் என மிகவும் விமர்சையாக வரவேற்பு நிகழ்ச்சிகள் (Reception) எல்லாம் வைத்து ஆடம்பரமாக செய்கின்றனர். இது முழுக்க முழுக்க ஒரு வேத நிகழ்ச்சி ஆகும். தவிர, இது ஒரு ஆரம்பம் தான். பூணூல் தரித்த அந்த பாலகன் உபநயனத்திற்குப் பிறகு தினந்தோறும் ஒரு ஆசார்யரின் உதவியுடன் சந்தியாவந்தனமும், சமிதாதானமும் கற்றுக் கொண்டு செய்ய வேண்டியது இன்றியமையாத கடமையாகும். இன்று, பூணூல் போட்டதோடு தன் கடமை முடிந்தது என்று பல பெற்றோர்கள் அவனை கண்காணிக்காமல் அதற்கு பிறகு விட்டு விடுகிறார்கள். மேலும், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பே ஒரு பெரிய சுமையாகி விட்டது.

ஆனால், இது தொடரும் பட்சத்தில் இது மேன்மேலும் அவர்களுக்கு பாவங்களைத்தான் சேர்க்கும். இதை செய்வதினால் புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் நிச்சயம் பாவங்கள் வந்து சேரும். அதற்குப் பயந்தாவது, அனைவரும் இதை நாள்தோறும் நித்திய கர்மாவினை செய்யவேண்டும்.

இதை மேன்மேலும் ஷோபிக்க செய்யவும், குழந்தைகளுக்கும் இதன் தேவையை எடுத்துரைக்கவும், பயன்களை விளக்கவும், ஒரு சிறிய முயற்சியாக வருகின்ற மே மாதம், முதல் வாரம், “காமகோடி வித்யாலயா” என்ற அமைப்பின் சார்பாக, ஒரு வாரம் “நித்திய கர்மாவின் செய்முறையும், பலன்களும்” க்கான முகாம் நடைபெற உள்ளது. தட்சினை எதுவும் கிடையாது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை முகாமிற்கு அனுப்பி பயன்/பலன் பெறுமாறு ஸ்ரீமகாபெரியவா அனுகிர ஹத்துடன் வேண்டுகிறோம்.

  • ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
  • நமாமி பகவத்பாதம் சங்கரம் லோக சங்கரம்
  • ***********ஓம் தத்ஸத்*********