Sloka

கோ ஸம்ரக்ஷணம்

img-3

கோ மாதாவிற்கு (பசுவிற்கு) இந்து சமயத்தில் ஒரு மேன்மைமிகு ஸ்தானம் கொடுக்கப்பட்டுள்ளது.

நம் சமயத்தில் உள்ள வேதம், சாஸ்திரம் மற்றும் புராணங்கள் பசுவை தாயின் மறு உருவமாகவும், அனைத்து கடவுள்க‌ள், ரிஷிகள், தேவதைக‌ள், புண்ய நதிகளின் இருப்பிடமாகவும் போற்றுகிறது. அனைத்து யாகங்களுக்கும் உயிர்நாடியாக விளங்குவதும் பசுவே. நம் தேசத்தின் விவசாயம் மற்றும் சமூகநலத்தின் உயிர்நாடியாக விளங்குவதும் பசுவே ஆகும்.

பசுவின் மகத்துவத்தை இந்த உலகிற்கு உணர்த்த, மகாபாரதத்து கிருஷ்ணன் ஒரு இடையனாகவே பிருந்தாவனத்தில் பிறந்தான். எந்நேரமும் பிருந்தாவனத்தில் பசுக்களின் துணையுடனே காட்சி கொடுத்தமையால் அவனுக்கு ‘கோபாலன்’ என்றும் ‘கோவிந்தன்’ என்றும் அழைக்கப்பட்டான். மேலும் தனது பகவத் கீதையில், பசுக்களில் நானே காமதேனு என்று கூறுகிறான்.

நம் வேதங்கள் பசுவின் பாலை அமுதமாக விவரிக்கின்றன. பசுவின் நெய்யையே யாகங்களில் பயன்படுத்த நம் இந்து சமயம் அறிவுறுத்துகிறது. பசுஞ்சாணத்தினால் செய்யப்படும் வரட்டியே யாகங்களில் பயன்படுத்தப்படுகிறது. வேதங்கள் கோதானத்தையே (பசு தானம்) தானங்களில் உயர்ந்த தானமாக சொல்லியுள்ளது.

இன்றும் நம் சிவ-வைணவ ஆலயங்களில், காலையில், பசுவிற்கும் அதன் கன்றிற்கும் பூஜைகள் நடைபெறுகின்றன. அதன் பிறகே மற்ற சேவைகள் தொடங்குகின்றன.

காஞ்சி மகாபெரியவர் தன் ‘தெய்வத்தின் குரலில்’ பசுவின் மேன்மையைப் பற்றி விவரித்துள்ளார். அதில் கூறுகையில்,

“பசு ஒரு மிருகமாக தோன்றினாலும் நம் தாயைப்போல் பாலின் மூலம் உணவூட்டுகிறாள். தாய் கூட நம் பால்ய பருவத்திற்கு பிறகு பால் கொடுப்பதில்லை, ஆனால், பசுவோ நம் வாழ்நாள் முழுவதும் தனது இரத்தத்தை பாலாக தருகிறது. அதன் காரணமாகவே பசுவை நம் இந்து சமயம் மற்ற தாய்களான – நம்மைப் பெற்ற தாய், நம்மைத் தாங்கும் தாயான பூ மாதா, நம்மைக் காக்கும் தாயான பராசக்தியைப்போல் ஒரு உயர்ந்த இடத்தை தந்துள்ளது.

இந்த உலகத்தின் நலன் நம் பாரத தேசத்தில் என்றும் நடைபெற்று வரும் வைதீஹ கர்ம அநுஷ்டானங்களை நம்பியே உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த உண்மை. இதில் ஒரு சந்தேகமும் ஐயப்பாடும் எவருக்கும் இருக்க முடியாது. அனைத்து உலகங்களும் யாகத்தினாலேயே இயங்குகிறது. அந்த யாகத்தின் மூலாதாரமாக இருப்பது பசு தான். பசுவை நாம் காத்தால் நாம் இந்த உலகத்தை காக்கின்றோம் என்றாகிறது.

மஹாலக்ஷ்மி பசுவின் ப்ருஷ்ட பாகத்தில் (பின்புறம்) வசிக்கிறாள். மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் ஐந்து இடங்களில் இதுவும் ஒன்று.

நம் இந்து மதத்தின் இரு கண்களான இராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் பசுவைப் பற்றியும் வேத பிராமணர்களையும் அவ்வளவு உயர்வாக சொல்லி இருக்கிறது.

இராமயணத்தில், கடைசியில் வரும் மங்கள ஸ்லோகத்தில்,

 • “கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம்-
 • லோகா: ஸமஸ்தா: ஸூகிநோ பவந்து”

என்று ஒரு ஸ்லோகம் வருகிறது. அதில் பசுவையும் பிராமணர்களையும் பற்றி மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது. மற்ற உயிரினங்களைப்பற்றியும் குறிப்பிடாமல் பசுவை மட்டுமே கூறப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணனிடம் வேண்டும்போது,

 • “நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாய ச|
 • ஜகத்: ஹிதாய கிருஷ்ணாய கோவிந்தாய நமோ நம: ||”

என்று வேண்டுகிறோம். இதிலும் பசுவையும், வேதத்திற்கே தன்னை அர்ப்பணித்த பிராமணனைப்பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.

நாம் பசுவை பட்டினி போடுவதன் மூலம் ஒரு பெரிய கள‌ங்கத்தை ஏற்படுத்துகிறோம். பசுவை உணவாக உண்ணும் வெளிநாடுகளில் கூட, அவர்கள் பசுவை நன்றாக பராமரித்து வளர்க்கிறார்கள், இதனை அந்த நாட்டு பசுக்களைப் பார்த்தாலே தெரியும். தெய்வமாக மதிக்கும் நம் நாட்டில், நாம், அதனை பேணிக்காக்காமல் அலட்சியப்படுத்துகிறோம். அதனை பேணிக்காக்க முயற்சிக்காமல், பசு வதையை குறை கூறுவது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. ஆனாலும் பசு வதை நியாயமாகாது.

பசுவை எல்லோராலும் பேணிக் காக்க முடியாது என்றாலும், அதன் உணவான ஒரு புல்லுக்கட்டை எல்லோராலும் தினமும் கொடுக்க முடியும். இதனை நம் தர்ம சாஸ்திரங்கள் ‘கோக்ராஸம்’ என்று கூறுகின்றன. ‘க்ராஸம்’ என்றால் ஒரு வாயளவு என்று பொருள். இதையே திருமூலர் ஒரு பாடலில் கூறியுள்ளார்.

 • “யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
 • யாவர்க்கும் ஆம் பசுவுக்கொரு வாயுறை
 • யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி
 • யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே”

மேலும், நம் வீடுகளில் சேரும் காய்கறி கழிவுகளை பசுவிற்கு உணவாக கொடுக்கலாம். அதேபோல், உணவகங்களில் சேரும் காய்கறி கழிவுகளையும் நாம் ஒரு ஏற்பாடு செய்து அதை எல்லாம் பசுக்களுக்கு உணவாக செய்வோமேயானால் ஒரு பெரிய கைங்கர்யம் செய்த புண்ணியம்.

பசுவின் நலம் ஒரு தேசத்தின் நலத்திற்கு இணையானது. பசுவை ரக்ஷிப்பதால் பாவங்கள் குறையும். அமைதி நிலவும். கலி தோஷம் விலகவும், தர்மம் தழைக்கவும் கோஸம்ரக்ஷணம் மிகவும் இன்றியமையாதது.

நாம் அனைவரும் இந்த ஒரு விஷயத்தில் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்ற வேண்டும். இது ஒரு முடியாத காரியம் என்று நினைக்காமல், நம் கடமைகளில் ஒன்றாக கருதி செயல்படுத்த வேண்டும். இதனால் நமக்கு உடற்சோர்வு மற்றும் பணவிரயம் ஆனாலும் பசுநலனை நம் தேசநலனாக கருதி பேணிக்காக்க வேண்டும்.

பசுவதையை தடுக்க எல்லாவிதமான முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். பசு வதை நம் தாயைக் கொன்ற செயலுக்கு ஈடாகும். இதற்கு ஒரு பிராயச்சித்தமும் கிடையாது.”

மஹாத்மா காந்தி பசுவின் மேன்மையைப் பற்றி “பசுவைக் காப்பது நம் இந்து சமயம் இந்த உலகத்திற்கு கொடுத்த பரிசு. நம் நெற்றியில் ஒரு திலகம் இருப்பதனாலேயோ, மந்திரங்களைச் சரியாக உச்சரிப்பதனாலேயோ, புண்ய தலங்களுக்கு செல்வதனாலேயோ, சடங்குகளைச் சரியாக செய்வதனாலேயோ நம்மை இந்துவாக கருதுவதை விட ஒரு பசுவை காப்பதாலேயே நாம் கருதப்படுவோம்.” என்றார்.

பசுவினால் கிடைக்க கூடிய நன்மைகள்

 • பசு மற்றும் காளை மாட்டினால் செய்யப்படும் விவசாயத்தினால் பல நன்மைகள் உள்ளதை இந்த உலகமே அறியும். கரிம வேளாண்மையினால் (organic farming) பல நன்மைகள் உள்ளன. உற்பத்தியை பெருக்கி, செலவைக் குறைத்து, நம் உடலுக்கும் சத்தான உணவு வகைகளை நமக்கு தருகின்றது.
 • பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருள்களான தயிர், நெய், கோமயம் மற்றும் பசுஞ்சாணியினால் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. இந்த பொருட்கள் நம் உடலுக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் நம் உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.
 • ஆயுர்வேத பஞ்சகவ்ய மருத்துவத்தின் மூலம் பசுவினால் கிடைக்கும் பொருள்களை வைத்தே உள்ளது.
 • பசுஞ்சாணம் ஒரு கிருமி நாசினி. நம் வீடுகளில் பசுஞ்சாணத்தினால் சுத்தம் செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது.
 • பசுஞ்சாணத்தினால் நம் நாட்டில் மின்சாரத்தை தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து அதன் பயன்பாட்டை பல இடங்களில் காண்கிறோம்.
 • பசுஞ்சாணத்தை காய வைத்த வரட்டியை யாகங்களில் பயன்படுத்துகிறோம்.
 • பசு வரட்டி தான் யாக அக்னியில் எரியூட்டப்பட்டு சாம்பலாகி விபூதியாகிறது (திருநீறு).

இந்துக்களாகிய நாம் எல்லாரும், மகா பெரியவாளின் ஆக்ஞைப்படி ‘கோ’ ரஷணத்தை செயல்படுத்த இனி முதற்கொண்டு உறுதி பூணுவோம்.