Sthree-dharmam

ஸ்த்ரீ தர்மம்

img-4

இந்த ப்ரபஞ்சம் ஆரம்பமானது முதல் ஸ்த்ரீ புருஷன் என்ற இரு பால்கள் ஸ்ருஷ்டிக்கப்பட்டது. மனித ஸ்ருஷ்டியில் அடங்கிய ஸ்த்ரீ – புருஷர்களுக்கு இயல்பாகவே சிற்சில தன்மைகள் பொதுவாகவும் சில புருஷர்களுக்கென்றும் சில ஸ்த்ரீகளுக்கென்றும் தனித்தன்மை பெற்றவைகளாகவும் உள்ளன. உதாரணமாக, ஸ்த்ரீகளுக்கென்றே, தாய்த்தன்மை ஏற்பட்டுள்ளது. இதை மாற்றவோ, இதனால் தாய்க்குலத்தை குறைவாக மதிப்பிடவோ இடமில்லை. வேதம், ‘மாத்ரு தேவோ பவ’ என்று தாயை முதலில் கூறிய பிறகு தான், ‘பித்ரு தேவோ பவ’ என்று தந்தையை குறிப்பிடுகிறது.

இந்து சமயத்தில் ஸநாதன தர்ம முறைப்படி ஸ்த்ரீகளுக்கு அளித்துள்ள அவ்வளவு பெருமை புருஷனுக்கு இல்லை என்று கூட சொல்லலாம். குடும்பத் தேரின் இரு சக்கரங்கள் புருஷனும் மனைவியும். கிருஹஸ்த தர்மங்களைச் செய்வதில் ஸ்த்ரீகளுக்குத் தான் அதிக முக்யத்துவம். எந்த வீட்டில் ஸ்த்ரீகள் போற்றப்படுகின்றனரோ அங்கு தேவதைகள் சந்தோஷப்படுகின்றனர். ‘க்ருஹம்’ என்ற பெயர் வீட்டிற்கு ஏற்பட்டதே க்ருஹலக்ஷ்மீயாகவும் க்ருஹதேவதையாகவும் உள்ள ‘க்ருஹிணீ’யினால் தான் என்று கூறக்காண்கிறோம். ஸ்த்ரீயானவள் தன்னுடைய இயற்கையாய் அமைந்த இந்த ஸ்த்ரீத்வத்தை இரக்ஷித்து கொள்ள வேண்டும்.

பதிவிரதைகளான ஸீதை, மண்டோதரீ, தமயந்தீ, நளாயினி, ஸாவித்ரீ, மைத்ரேயீ போன்றவர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அவர்களுடைய சாதனைகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அந்தஸ்தும், அவர்களுடைய பெருமையும், ஸநாதனதர்மத்தின் – இந்து – சமயத்தின் பெருமையையும் நன்கு அறிய முடியும்.

சமூகத்தில் ஸ்த்ரீகள் ஆணுக்குச் சமம் என்பதல்ல, ஆண்களைவிட ஒருபடி மேலாகவே தான் நம்முடைய வேத-சாஸ்திரங்கள் எல்லாம் கூறுகின்றன.

ஸ்த்ரீ ஆண் மாதிரி பதவி, உத்யோகம் என்று வெளியுலக விஷயங்களில் ஈடுபடாமல் வீட்டு நிர்வாகத்தை எந்தவித குறையும் இல்லாமல் கவனித்துக் கொள்வதையே தன்னுடைய பிறவிப் பணியாகவும், நல்ல ஸாதனா மார்கமாகவும் வைத்து கொள்ள வேண்டும். வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் போகிறோம் என்றால் இரண்டிலுமே அர்ப்பணிப்பு குறைந்து போகும். ஒருவேளை இரண்டையும் சரியாக செய்ய முடிந்தாலும் அது அவளுக்கு தர்மமாகாது. ஏனென்றால், பலதரப்பட்ட பிரச்சனைகளை அவள் சமாளித்தாக வேண்டும். இந்த இன்னல்களுக்கு ஆளாகாமல், ஸ்த்ரீயானவள் தன் தார்மீகப் பொறுப்பான குடும்பப் பொறுப்பை ஏற்று சிறப்பாக குடும்பத்தை வழி நடத்திட வேண்டும்.

அவள் ஒருத்தியால் மட்டுமே குடும்பத்தை ஒழுங்கான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இதனால் குடும்பத்தில் நிம்மதியும், சாந்தியும், சௌக்கியமும் கூடும். இவ்வாறு ஸ்த்ரீகளும், புருஷர்களும் அவரவர் ஸ்வதர்மப்படி அவள் உள்நிர்வாகம், அவன் வெளிநிர்வாகம் என்று அழகாக பங்கீடு செய்து வாழ்ந்தால் நிம்மதியான வாழ்வு நிச்சயம்.

ஸ்த்ரீகளுக்கு நம் வேதங்களும் சாஸ்திரங்களும் நிறைய நியமங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:

 • பதிசேவையே ஸ்த்ரீகளுக்கு அனைத்து புண்ணியங்களையும் வசமாக்கும்.
 • ஸ்த்ரீயானவள் தினமும் அவள் கணவனை வணங்க வேண்டும். இது
  அவளுடைய பாப நிவர்த்திக்காக செய்யப்படுகிறது. கணவனிடம் இருந்து பித்ருக்களும் தேவர்களும் அதை பெறுவர் என்று கூறப்படுகிறது.
 • கணவன் சம்பாதித்துவரும் சம்பளத்தை வைத்து குடும்பத்தை நேர்வழியில் நடத்த வேண்டும். அதில் சிறிதளவு சேமிக்கவும் வேண்டும்.
 • ஸ்த்ரீயானவள் எப்பொழுதும் அன்பின் வடிவமாக இருக்க வேண்டும். அன்பினால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.
 • ஸ்த்ரீயானவள் காலையில் சூரிய உதயத்திற்கு முன் விழித்துக் கொள்ள வேண்டும்.
 • ஸ்த்ரீயானவள் வீட்டை தினந்தோறும் காலையில் கோமயத்தால் (பசுஞ்சாணம், பசுவின் சிறுநீர்) சுத்தம் செய்ய வேண்டும். கோமயத்தால் மெழுகிய இடம் சுத்தமாகிறது. கோமயம் ஒரு கிருமி நாசினி.
 • தினமும் அதிகாலையில் குளித்து பின் வாசல் தெளித்து கோலம் போட வேண்டும்.
 • பூஜை அறையை சுத்தம் செய்து காலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்ற வேன்டும்.
 • ஸ்த்ரீயானவள் தினமும் கண்ணுக்கு மை இட்டு, நெற்றிக்கு குங்குமம் வைத்து, தலைமுடியை பின்னலிட்டு நுனி முடிந்து, பூ வைத்து கொள்ள வேண்டும். இது அவளுக்கு நன்மையை பயக்கும்.
 • ஸ்த்ரீயானவள் தினமும் சமையல் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் தானே செய்ய வேண்டும். சமைக்கும்பொழுது நல்ல மனத்துடன், முடிந்தால் இறைவனின் நாமங்களை சொல்லிக்கொண்டே, உணவு சமைக்க வேண்டும். நம் எண்ணங்கள் உணவோடு சேர்ந்து நம் உடலுக்குள் செல்கின்றது. நல்ல எண்ணத்துடன் செய்யப்படும் உணவு அனைவருக்கும் நல்ல பயனைக் கொடுக்கும்.
 • ஸ்த்ரீயானவள் தினமும் மாலை கணவன் வேலை முடித்து வீட்டிற்கு வரும்பொழுது இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்க வேண்டும்.
 • இரவு 9.30 மணிக்கு நித்திரைக்குப் போய்விடவேண்டும். அப்பொழுது தான் உஷக் காலத்தில் எழுந்திருக்க முடியும்.

காஞ்சி பெரியவர் ஸ்த்ரீ தர்மத்தை பற்றி மிகவும் மேன்மையாக எடுத்துரைத்துள்ளார். “பராசக்தி என்று அத்தனை ஆற்றல்களுக்கும் பிறப்பிடமாக ஒருத்தியைச் சொல்கிறோமே, ஸ்த்ரீயே பராசக்தியின் ஸ்வரூபம். ஸ்த்ரீயானவள் அவளுடைய சக்தியை அடக்கிக் கொண்டு விட்டால் அது வீணாகப் போகாமல் புருஷ ஜாதியின் மூலம் நன்றாக சோபிக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.” ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல என்று கூறும் இக்காலத்தில் இந்த உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும்.

இந்த காலத்தில் ஸ்த்ரீயானவள் பல விஷயங்களில் தவறான பாதையில் செல்வதை பார்த்து ஜகத்குரு மிகுந்த வருத்தமடைந்து பல தர்மங்களை ஸ்த்ரீகளுக்கும் எடுத்துரைத்துள்ளார். ஒரு வீட்டில் தாயானவள் அன்பின் வடிவமாக இருக்க வேண்டும், அன்பினால் சாதிக்க முடியாதது இப்பூவுலகில் எதுவுமில்லை. அன்போடேயே துணை சேர்ந்து வருகிறவை தியாகம், பணிவு, பொறுமை, ஈகை, தாக்ஷிண்யம் ஆகும்.

வீட்டு வேலைகளை செய்தாலே ஆரோக்ய வாழ்வை வாழலாம். அந்த காலத்தில் பாட்டிமார்கள் வேலை செய்யவே அஞ்சமாட்டார்கள். இழுத்துப்போட்டுக் கொண்டு எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். ஆகையாலேயே ஆரோக்கியமாக இருந்தார்கள். ஸ்த்ரீகள் சூரியன் விடிவதற்கு முந்தியே எழுந்து குளித்து, வாசல் தெளித்து, மெழுகி, கோலம் போடுவார்கள். அது வீட்டை அழகு பண்ணுவது மட்டுமல்லாமல் ஸ்த்ரீகளையும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க பண்ணிற்று. இப்பொழுது எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி வீடுகள் தான் இருக்கின்றன, அதனால் வாசல் தெளிப்பதை பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. இருந்தாலும் இருக்கின்ற இடத்தில் வாசல் தெளித்து ஒரு கோலமிட்டால் நன்றாக இருக்கும்.

இன்றைக்கு பெண்களுக்கு எல்லா வேலைகளையும் சுலபமாக்க மின்கருவிகள் வந்து விட்டன. அதை உபயோகித்து முடிந்தவரை தன்னால் ஆன வேலைகளை தானே பார்த்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே வேலை ஆட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆடை விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். மேலை நாட்டு மோகத்தை விட்டுவிட்டு நம் இந்திய பாரம்பரிய உடைகளை உடுத்த வேண்டும். ஒரு தாய் தன் தர்ம முறைப்படி தன் குழந்தைக்கு பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். தன் குழந்தைகளை கண்களைக் காப்பது போல் எந்நேரமும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இன்றைய குடும்பங்களில் ஆடம்பர வாழ்க்கையை விரும்பி கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு போகும் நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். தேவைக்கு அதிகமான விருப்பங்கள் அவர்களை நிர்ப்பந்திக்கின்றது. தன் சொந்த பந்தங்கள் மற்றும் சுற்றம் வாழும் ஆடம்பர வாழ்க்கை தாமும் வாழ வேண்டும் என்ற ஆசை தான் இதற்கு காரணம்.

மேலும் பெண்கள் வேலைக்கு செல்வதால் தன் குழந்தைகளை சரிவர அன்போடு வளர்க்க சிரமப்படுகின்றனர். எப்பொழுதும் ஒருவித மன அழுத்தத்திலேயே வார நாட்களை கழிக்கின்றனர். வார கடைசியில் தங்கள் வேலைகளை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. சில குடும்பங்களில் குழந்தைகள் தன் தாய் தந்தையை வாரக் கடைசியில் தான் காண்கின்றனர். அந்த அளவிற்கு பெற்றோர்கள் வேலைச் சுமையோடு இருக்கிறார்கள். ஸ்த்ரீ வழிநடத்தாத குடும்பங்கள் எப்படி சிதிலமடைகிறது என்று இன்று கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நிஜமான சௌக்யம் ஆத்ம சௌக்யமே என்று உணர மறுக்கிறார்கள். இதனால் தான் பெண்கள் வேலைக்குப் போக வேண்டாம், அப்படி கட்டாயமாகச் செல்ல வேண்டும் என்ற பட்சத்தில் சேவை மனப்பான்மையுள்ள தொழில்களான ஆசிரியை தொழிலோ, வைத்தியராகவோ, நர்ஸாகவோ செல்லலாம் என்றாகிறார் காஞ்சி பரமாச்சாரியார்.

நன்றாக உணர்ந்து பார்த்தால், அந்த காலத்தில், நம் நாட்டுப் பெண்கள் வேத தர்மங்கள் சொன்னபடி தன் தர்மங்களை செய்து கொண்டு அமைதியான பொறுப்பான அன்பான வாழ்க்கை வாழ்ந்து காட்டி நமக்கு உதாரணங்களாக இருந்திருக்கிறார்கள். நாமும் கொஞ்சம் அதை நன்றாக உணர்ந்து அதில் சிறிதளாவது பழக்கப்படுத்திக் கொண்டு வாழ்ந்தோமேயானால் நம் வாழ்க்கையும், நம் குடும்பங்களின் வாழ்க்கையும், நம் சந்ததிகளின் வாழ்க்கையும் இந்த சமூகமும் மேன்மேலும் செழித்து வளரும். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய ப்ரார்த்திப்போம்.