Veda

வேதத்தின் மகத்துவம்

img-2

நமது பாரத தேசத்திற்கு இல்லாத பெருமை உலகில் வேறு எந்த தேசத்திற்கும் இல்லை. மற்ற தேசங்கள் நமது தேசத்தை விட பொருளாதார, அறிவியல் வளர்ச்சியில் உயர்ந்து காணப்பட்டாலும், பாரத தேசத்திற்கு உள்ள தனிப்பெருமை என்றுமே அழியாதது. அனைத்து நாட்டவர்களும் விரும்பும் படியான கலாச்சாரம் நமது தேசத்தில் இருப்பதில்தான், அனைவரும் இங்கு வருகிறார்கள். நமது கலாச்சாரம் ‘வர்ண தர்மம்’ முறையை சார்ந்தது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத முறை இது. இந்த ‘வர்ண தர்மம்’ தான் பாரததேசத்தை ஒப்பிட முடியாத தேசமாக மாற்றுகிறது.

வர்ண தர்மம் நம்மிடையில் சிதைந்து வருவதால், நமது நாட்டிலும் முன்பில்லாதொரு அழிவுகள், நாசங்கள் நடைபெறுகிறது. ‘வர்ண தர்மம்’ என்பது தொழிற் அடிப்படையில் உருவானது. பரம்பரை பரம்பரையாக ஒரு தொழிலை செய்யும் போது, அந்தத் தொழிலின் அனைத்து ரகசியங்களும் சொல்லிக்கொடுக்காமலேயே தெரிந்து விடுகிறது. வர்ண தர்மம் சிதைந்து போனதற்கு ப்ராமணன் தான் பொறுப்பாளி. ப்ராமணன் வேத அத்யயணத்தை விட்டு விட்டு மற்ற தொழில்களை செய்வதால் வேத மந்திரங்களின் சப்தங்கள் குறைந்து விட்டன. அழிவுகள் அதிகமாகி விட்டன.
வேதத்தின் பெருமையை உணர்ந்து ஔவையார்

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்றும்

திருவள்ளுவர் தனது திருக்குறளில்

  • “மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
  • பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

அர்த்தம் : ஒரு ப்ராமணன் வேதத்தை மறந்து விட்டால் கூடப் பரவாயில்லை, அவனுடைய ஒழுக்கத்திலிருந்தும், ஆசாரத்திலிருந்தும் வழுவ விட்டால் ப்ராமண ஜன்மா கெட்டுப் போகும்.

என்றும் வேதத்தின் இன்றியமையாமையை குறிப்பிட்டுள்ளார்கள்.

வேதம் என்பது என்ன ?

வேதம் பரமாத்மாவின் சுவாசம். பரமாத்மாவின் சுவாசமான வேதத்தை அனுதினமும் தவறாமல் அத்யயனம் பண்ணுவதால் நல்ல அதிர்வலைகள் உண்டாகிறது. நல்ல அதிர்வலைகள் காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல அதிர்வலைகள் உண்டாகிறது. இதன் மூலம் கெட்ட சக்திகளும், துர்தேவதைகளும் அழிந்து விடும். நல்ல அதிர்வலைகளால் அனைத்து ஜீவராசிகளும் சுபிஷமாக வாழமுடிகிறது.

வேதம் தான் இந்து மதத்தின் உயிர் நாடி. வேதத்தில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை. வேதத்தில் கணிதம், அறிவியல், ஜாதகம், என அறுபத்து நாலு கலைகளும் உள்ளன. வேதத்தை கற்றுக்கொண்டு அதன்படி நடப்பதன் மூலம் ப்ரம்மத்தை உணரவும், மற்றவர்களுக்கு உணரவைக்கவும் முடியும்.

ப்ராமனணாக ஒருவன் பிறக்கும் போதே, அவன் ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும், பித்ருகளுக்கும் கடன் பட்டவனாகவும் பிறக்கிறான். ப்ராமணன் வேதத்தைக் காதால் கேட்டுப் பாடம் பண்ண வேண்டும். அதாவது அத்யயனம் பண்ண வேண்டும். அதை மற்றவர்களுக்குக் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதோடு ப்ராமணன் வேதத்தில் சொல்லியிருக்கிற நித்ய கர்மானுஷ்டங்களையும், யாக யக்ஞாதிகளையும் செய்ய வேண்டும் என்று வேதத்தில் இவர்களுக்கு தொழிலை வகுத்துக் கொடுக்கிறது. எந்த சப்தங்கள் சகல பிராணிகளுக்கும் இகபர நலனைத் தருமோ, அவையே வேதங்களில் உள்ள மந்திரங்கள். நம் கண்ணுக்கும், காதுக்கும், புத்திக்கும், யுக்திக்கும் எட்டாததைச் சொல்லவே வேதம் இருக்கிறது.

வேதத்தை எழுதிப் படிக்கக் கூடாது. காதால் கேட்டுக் கேட்டுத் திரும்ப திரும்ப வாயால் உருப்போட்டுத் தான் மனப்பாடம் பண்ண வேண்டும். அப்புறம் இம்மாதிரி அடுத்த சந்ததியினருக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

வேதம் மட்டுமில்லாமல், மற்ற சாஸ்திரங்கள், கலைகள் என எல்லாவற்றையுமே ரக்ஷித்து அந்தந்தக் கலையைத் தொழிலாகக் கொண்ட பிற வர்ணத்தாருக்குப் போதிக்க வேண்டியது ப்ராமணனுடைய தொழில். வேத அத்யயனம், வேத அத்யாபனம் தான் இவனுடைய தொழில். இதன் மூலம் தான் ப்ராமணன் ஜீவித்து இருக்க வேண்டும்.

சகல ஜனங்களுக்கும் – ஜீவ ஜந்துக்கள் அத்தனையும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என பரஸ்பர சகாயத்துக்காகவே ஜனங்கள் அவரவருக்கு ஏற்பட்ட தர்மங்களை உயர்வு தாழ்வு எண்ணமேயில்லாமல் பின்பற்ற வேண்டும். எல்லாருக்கும் தனதான்ய ஸம்ருத்தி, ஆத்ம க்ஷேமம் கிடைப்பதற்காகச் சிலரிடம் வேத சப்தம் இருந்தேயாக வேண்டும். அதனால் ப்ராமணனாக பிறந்தவன் தனது சுக துக்கங்களைப் பற்றி கவலைப்படாமல், மிகவும் எளிய வாழ்க்கை மேற்கொண்டு வேதத்தை ரக்ஷிப்பதற்கும், தர்ம காரியத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும். வேதத்தையும், ஆத்மார்த்தமாக வேதம் சொல்லுபவர்களையும் ரக்ஷித்தால் உலகமே சுபிக்ஷமாகும்.

ஒவ்வொரு ஊரிலும் வேதத்தை அத்யயனம் பண்ணுவதற்கு ஒரு பாடசாலை மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குழந்தை வேதத்தை அத்யயனம் பண்ணுவதன் மூலம் வேதத்தை ரக்ஷிக்க வேண்டும் என மகா பெரியவா காட்டிய வழியில் நாமும் வேத ரக்ஷணத்திற்காக சங்கல்பம் எடுத்துக் கொள்வோம்.